கண்ணாமூச்சி ரே ரே – 6 Like

ஆதிராவும் நாணம் விலகாமலே சொல்லிவிட்டு.. காரை ஸ்டார்ட் செய்தாள்.. கியர் மாற்றி ஆக்சிலரேட்டரை மிதிக்க, கார் வேகமெடுத்து சாலையில் ஓட ஆரம்பித்தது..!! மிதமான வேகத்திலேயே வண்டியை செலுத்தினாள் ஆதிரா..!! ஹன்சூர் ரோட்டை தாண்டி மைசூர் பேலஸை அடைந்ததும்.. வலது புறம் செல்கிற அந்த அகலமான சாலையில் வண்டியை திருப்பினாள்..!! உடனே ஆக்சிலரேட்டரை அழுத்தி வேகத்தை கூட்டினாள்..!!

அதே நேரத்தில்.. அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில்.. அதே சாலையின் குறுக்காக அமைந்திருந்த அந்த மேம்பாலத்தில்..

சர்ரென்று விரைந்து சென்ற அந்த பேருந்தில் இருந்து.. ஒரு உணவுப் பொட்டலம் வெளியே தூக்கி எறியப் பட்டது..!! எங்கிருந்து வந்தன என்று தெரியாமலே ஒரு பெரிய காகக்கூட்டம் பறந்து வந்து.. உடனடியாய் அந்த உணவுப் பொட்டலத்தை சூழ்ந்து கொண்டன..!! ‘கா.. கா.. கா..’ என்று கரைந்து சப்தமிட்டுக்கொண்டே.. அந்த பொட்டலத்தை கொத்தி கொத்தி குதற ஆரம்பித்தன..!! ஒரே ஒரு காகம் மட்டும்.. அந்த கூட்டத்துடன் சேராமல்.. தனித்து.. அந்த உணவைப் பற்றிய எந்த அக்கறையும் இல்லாத மாதிரி.. மேம்பாலத்தின் கைப்பிடி சுவரில் அமர்ந்தவாறு.. சாலையை நோட்டமிட்டுக் கொண்டிருந்தது.. சட்டென இப்போது பறக்க ஆரம்பித்தது..!!

“பிடிச்சிருந்ததா..??” சிபி குறும்பாக கேட்டான்.

“எது..??”

“முத்தம்..!!”

“ம்ம்.. பிடிச்சிருந்தது..!!” ஆதிரா நாணத்துடன் சொன்னாள்.

“அப்போ.. இன்னொன்னு..??” கேட்டுக்கொண்டே சிபி ஆதிராவின் தோளில் கைபோட,

“ஐயோ விடுங்கத்தான்..!!”

சிணுங்கிய ஆதிரா ஒருகணம் சாலையில் இருந்து பார்வையை விலக்கி, மீண்டும் சாலையை பார்த்தாள்..!! அதே கணத்தில்.. காரை நோக்கி பறந்து வந்த காகம்.. தனது இறக்கைகள் இரண்டையும் அகலமாக விரித்தவாறு ‘படீர்ர்ர்ர்’ என கார்க்கண்ணாடியில் வந்து மோதி.. தனது கூரிய அலகால் அந்த கண்ணாடியை ‘ச்சிலீர்ர்ர்ர்’ என்று ஒரு கொத்து கொத்தியது..!!

அவ்வளவுதான்..!! ஆதிரா பக்கென அதிர்ந்து போனாள்.. ‘ஆஆஆவ்வ்’ என்று கத்தினாள்.. குபீர் என்று ஒரு பய சிலிர்ப்பு அவளுக்குள்.. குழம்பிப்போனவள் ஸ்டியரிங்கை சரக்கென வளைத்தாள்.. ப்ரேக்குக்கு பதிலாக ஆக்சிலரேட்டரை அழுத்தமாக மிதித்தாள்..!! கார் சர்ரென உச்சபட்ச வேகத்துடன் சீறியது.. அதேவேகத்தில் சாலையில் இருந்த வேகத்தடையில் ஏறவும், ஜிவ்வென மேலே பறந்தது.. பத்து மீட்டர் தூரம் பாய்ந்து சென்று, ஒருபக்கமாக சாய்ந்தவாக்கில் தரையில் போய் விழுந்தது.. அப்படியே தரதரவென தார்ச்சாலையில் சறுக்கிக்கொண்டு போய்.. சாலையோரமாக நின்ற மரத்தின் மீது ‘டமார்ர்ர்ர்’ என்று மோதி நின்றது..!!

சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் ஒருகணம் ஸ்தம்பித்து போனார்கள்.. என்ன நடந்தது என்று விளங்கவே அவர்களுக்கு சிறிது நேரம் பிடித்தது..!! ‘அச்சச்சோ’ என்று பதறியடித்துக் கொண்டு காரை நோக்கி ஓடினார்கள்..!!

கசக்கிப் போட்ட காகிதமாய் கார் உருக்குலைந்து போயிருந்தது.. காரை சுற்றி குபுகுபுவென ஒரே கரும்புகை.. கண்ணாடிகள் கற்கண்டு துகள்களாய் சிதறிப் போய் கிடந்தன..!! கார் ஒருபக்கமாக சாய்ந்து ஓய்ந்து போயிருக்க.. நான்கு சக்கரங்கள் மட்டும் இன்னும் ஓயாமல் சுழன்று கொண்டே இருந்தன..!! டாஷ்போர்டுக்கு மேல் தொங்கிய அந்த காதல் கிளிகள்.. இப்போது ரத்தத்தில் தோய்ந்து போய் ஊசலாடிக் கொண்டிருந்தன..!!

VLUU L200 / Samsung L200

அத்தியாயம் 3

அடுத்த நாள் காலை.. அதிகமாய் ட்ராஃபிக் இல்லாத மைசூர் காந்தராஜ் சாலை..!! அந்த சாலையில்.. அகலமாகவும் உயரமாகவும் எழுந்து நிற்கிற அப்பல்லோ மருத்துவமனை.. அந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவை சார்ந்த அமைதியான ஒரு அறை..!!

ஆதிரா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்..!! அவளுடைய மார்புகள் சீராக ஏறி இறங்கிக் கொண்டிருந்தன.. அவளது தலையில் பலத்த அடிபட்டிருக்க வேண்டும்.. தலையை சுற்றி பெரிதாக ஒரு பேண்டேஜ்..!! முகத்தில் காணப்பட்ட சிறுசிறு சிராய்ப்புகள்.. இன்னும் கவனிக்கப்படாமலே விடப்பட்டிருந்தன..!! அவளுடைய இடதுபுற மார்புப் பிரதேசத்தில் இருந்து கிளம்பி சென்ற ஐந்தாறு எலக்ட்ரோடுகள்.. மேஜையில் வைக்கப்பட்டிருந்த ECG மானிட்டரின் பின்புறமாக சென்று முடிவடைந்தன..!! ஆதிராவின் இதயத்துடிப்பு வீதத்திற்கு ஏற்ப.. அந்த ECG மானிட்டர் பச்சை நிற அதிர்வலைகளை உருவாக்கிக் கொண்டிருந்தது.. ‘கீங்க்.. கீங்க்.. கீங்க்..’ என்ற சப்தத்தோடு..!!

மூன்று கால்களில் நின்ற அந்த ஸ்டீல் ஸ்டாண்டின், விரிந்திருந்த இரண்டு கைகளுள் ஒன்றில்.. ப்ளாஸ்டிக் சலைன் பாட்டில் தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்தது..!! அதிலிருந்து சொட்டு சொட்டாக இறங்கிய நிறமற்ற திரவம்.. குழாய் வழியிறங்கி ஆதிராவின் வலதுகை நரம்புக்குள் நேரடியாக பாய்ந்து கொண்டிருந்தது..!! தீருகிற நிலையை அந்த திரவம் இப்போது அடைந்திருக்க.. வேறொரு புதிய சலைன் பாட்டிலை மாற்றினாள், ஆதிராவை கவனித்துக் கொள்கிற கன்னட நர்ஸ்..!! நாஸில் திறந்து திரவ ஓட்டத்தை சீராக்கியவள்.. எதேச்சையாக ஆதிராவின் முகத்தை ஏறிட்டபோதுதான்.. அவளுக்கு இப்போது விழிப்பு வந்திருப்பதை கவனித்தாள்..!!

“வெல்கம் பேக் ஆதிரா.. குட் மார்னிங்..!!” என்றாள் புன்னகையுடன்.
ஆதிரா அவளுக்கு ஒரு உலர்ந்த புன்னகையை சிந்த முயன்று தோற்றாள்.. களைத்துப் போயிருக்கிறாள் என்பது அவளுடைய கண்களிலேயே தெளிவாக தெரிந்தது..!! உடலின் சக்தி முழுவதும் உறிஞ்சப்பட்டுப் போனது மாதிரியான ஒரு உணர்வு அவளுக்குள்..!! இமைகளை திறந்தும் மூடியும் திறந்தும் மூடியும்.. அப்படியே மலங்க மலங்க ஒரு பார்வை பார்த்தாள்..!! பிறகு.. உதடுகளை பிரித்து ஏதோ சொல்ல முயன்றாள்.. ஆனால் சப்தம் வெளிவராமல் போகவும்..

“ஏனு..??” ஆதிராவை கேட்டாள் அந்த நர்ஸ்.

ஆதிரா இப்போது விழிகளை ஒருமுறை அழுத்தமாக மூடி திறந்து.. மூச்சுக்காற்றை சற்றே தாராளமாக உள்ளிழுத்து வெளியேற்றி.. உடலில் எஞ்சியிருந்த ஆற்றலை எல்லாம் உதடுகளுக்கு தருவித்து..

“அம்மா..” என்றாள் ஈனஸ்வரத்தில்.

“ஓ.. அம்மா வெளில இருக்காங்க.. பாக்கணுமா..??”

“ம்ம்ம்ம்..!!”

“சரி.. வர சொல்றேன்.. பேசுங்க..!! பட்.. ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்காதிங்க..!!”

கனிவாக சொன்ன நர்ஸ், இதமான ஒரு புன்னகையை சிந்திவிட்டு, நிதானமாக திரும்பி நடந்தாள்.. அந்த அறையை விட்டு வெளியே வந்தாள்.. நீளமாக விரிந்திருந்த வராண்டாவை இப்படியும் அப்படியுமாய் பார்வையால் அலசினாள்..!! சற்று தூரத்தில் கிடந்த ஒரு மர இருக்கையில்.. பூவள்ளியும் தணிகை நம்பியும் கவலை தோய்ந்த முகத்துடன் காட்சியளித்தனர்..!! நடந்து அவர்களை நெருங்கியவள்..

“அவங்க கண்ணு முழிச்சுட்டங்க.. உங்களை பாக்கனும்னு சொல்றாங்க..!!” என்றாள்.

அவள் அவ்வாறு சொன்னதுமே.. பூவள்ளிக்கும் தணிகை நம்பிக்கும் முகத்தில் ஒருவித மலர்ச்சியும், சந்தோஷமும்..!! படக்கென இருக்கையில் இருந்து எழுந்தவர்கள்.. ஒருவர் முகத்தை ஒருவர் ஒருமுறை திரும்பிப் பார்த்துக் கொண்டார்கள்..!! பூவள்ளி கணவனின் கையை சற்றே ஆறுதலுக்கென பற்றிக்கொண்டாள்..!!

– தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *