ஆதிரா திடீரென அவ்வாறு சொல்வாள் என்று தணிகை நம்பி எதிர்பார்த்திரவில்லை.. ஒருகணம் திகைத்தவர், தான் அணிந்திருந்த டி-ஷர்ட்டை ஒருமுறை தலைதாழ்த்தி பார்த்தார்.. பிறகு மகளின் முகத்தை ஏறிட்டு, தடுமாற்றமாக சொன்னார்..!!
“ஆ..ஆமாம்.. ஆமாம்மா.. ந..நல்லாருக்கு..!!”
அவர் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே.. அவருக்கு பின்புறமாக பார்வையை வீசிய ஆதிரா.. முகத்தில் ஒரு புதுவித வெளிச்சம் பிறந்தவளாய்..
“அ..அத்தான்..!!” என்றாள்.
உடனே, பூவள்ளியும் தணிகை நம்பியும் தலையை திரும்பி பின்பக்கமாக பார்த்தார்கள்..!! அறை வாசலில்.. கண்களில் நீரும், கைகளில் மருந்துப்பையுமாக சிபி நின்றிருந்தான்.. அவனுடைய இடது நெற்றியில் ஒரு பிளாஸ்திரி.. முகத்தில் ஆங்காங்கே ரத்த தீற்றல்கள்..!! தூரத்திலிருந்தே சிலவினாடிகள் ஆதிராவை பார்த்துக் கொண்டிருந்தவன்.. இப்போது அவசரமாய் நகர்ந்து இவர்களை நெருங்கினான்..!! கையிலிருந்த மருந்துப்பையை டேபிளில் வைத்துவிட்டு.. ஆதிராவின் கரமொன்றை பற்றிக்கொண்டான்..!!
“ஆதிராஆஆ..!!” காதலும் தவிப்புமாய் சொன்னான்.
“உ..உங்களுக்கு ஒன்னும் ஆகலையே..??” கவலையும் கனிவுமாய் கேட்டாள் ஆதிரா.
“இ..இல்லடா.. எனக்கு ஒன்னும் இல்ல.. ஜஸ்ட்.. நெத்தில சின்ன அடி.. அவ்வளவுதான்..!!”
விலாப்பகுதியின் வெட்டுக்காயத்தை மனைவியிடம் சொல்லாமல் தவிர்த்து விட்டிருந்தான் சிபி.. தனக்கு ஏற்பட்டிருக்கிற காயம் அவளுடைய கவலையை அதிகரித்து விடக் கூடாது என்பதே அவனது எண்ணமாக இருந்தது..!! ஆதிரா இப்போது நீளமாக ஒரு நிம்மதி பெருமூச்சை வெளிப்படுத்தினாள்..!!
சிபி அவளுடைய கையை பற்றியிருந்தது அவளுக்கு இதமாக இருந்தது.. அதே சமயம் அவளுக்குள் ஒரு ஆச்சர்ய உணர்வும் ஓடியது.. ‘அத்தானுக்கு தன்மீது இத்தனை பிரியமா..?’ என்பது மாதிரியான ஆச்சர்யம்..!! தனது கையைப் பற்றியிருந்த சிபியின் கையை பார்த்தாள்.. அவன் கையில் அணிந்திருந்த கடிகாரத்தின் மீது ஆதிராவின் பார்வை நிலைத்தது..!! உடனே இன்னுமொரு ஆச்சரியத்துக்கு உள்ளானவள்..
“எ..என்னத்தான்.. வாட்ச்லாம் கட்டிருக்கிங்க..?? உ..உங்களுக்குத்தான் வாட்ச் கட்டுறதே பிடிக்காதே..??”
என்று திக்கி திணறி கேட்க, சிபி மெலிதாக அதிர்ந்தான். ஆதிராவின் முகத்தை குழப்பமாக ஒரு பார்வை பார்த்தான்..!!
“எ..என்ன சொல்ற ஆதிரா.. நீ..நீதான எனக்கு இந்த வாட்ச் ப்ரசன்ட் பண்ணின..??”
“நானா..????”
இப்போது ஆதிராவின் முகத்தில் ஒரு சிறு அதிர்ச்சி..!! தலைக்குள் குடைச்சல் எடுப்பது மாதிரி ஒரு உணர்வு அவளுக்கு.. அவஸ்தையாக முகத்தை சுளித்தவள், அப்படியே கண்களையும் நெற்றியையும் சுருக்கிக் கொண்டாள்..!! அவளுடைய பேச்சிலும், கேள்விகளிலும் மற்ற மூவரும் சற்றே குழம்பிப் போயிருந்தனர்.. அந்த குழப்பத்தின் ரேகைகள் படர்ந்திட்ட முகத்துடன், அவளையே அசைவில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்..!!
இப்போது.. ஆதிரா மூடிய விழிகளை மெல்ல திறந்தாள்.. சுற்றி நின்ற மூவரையும் மருள மருள ஒரு பார்வை பார்த்தாள்..!! பிறகு அந்த பார்வையை, அறையை சுற்றி ஒருமுறை அலைபாய விட்டாள்.. அப்புறம் திடீரென ஞாபகம் வந்தவளாய் அப்பாவிடம் திரும்பி கேட்டாள்..!!
“தாமிரா எங்கப்பா.. காணோம்..??”
அவ்வளவுதான்..!! மற்ற மூவரும் இப்போது ஒரு உச்சபட்ச அதிர்ச்சியை உள்வாங்கினார்கள்..!! மூவருக்குள்ளும் ஒரு கலவர உணர்வு ஜிவ்வென்று ஓட.. ஆதிராவின் முகத்தையே ஒருவித மிரட்சியுடன் பார்த்தார்கள்..!! ஆதிராவும் என்னவென்று புரியாமல் அவர்களுடைய முகத்தையே மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தாள்..!! ஓரிரு வினாடிகள்.. அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வராமல் போகவும்,
“சொல்லுங்கப்பா.. தாமிரா எங்க போயிருக்கா..?? எ..எனக்கு அடிபட்டது அவளுக்கு தெரியாதா..??”
என்று ஆதிராவே திரும்பவும் கேட்டாள்..!! மகளின் கேள்விக்கு பதில் சொல்லாமல்.. அவளுடைய முகத்தை திகைப்பாக பார்த்த பார்வையையும் மாற்றிக்கொள்ளாமல்.. மருமகனை திணறலாக அழைத்தார் தணிகை நம்பி..!!
“சி..சிபி..!!”
“எ..என்ன மாமா..??” சிபியும் மிரட்சி நீங்காத விழிகளுடன் தணிகை நம்பியை திரும்பி பார்த்தான்.
“டா..டாக்டரை வர சொல்லுப்பா..!!”
தணிகை நம்பி சொல்லவும், ஒருவித தடுமாற்றத்துடனே சிபி எழுந்துகொண்டான்.. ஆதிராவை பார்த்தவாறே அறை வாசலுக்கு நகர்ந்தான்..!! எதுவும் புரியாத ஆதிரா அப்பாவை திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டிருந்தாள்..!!
“எ..என்னப்பா ஆச்சு.. சொல்லுங்கப்பா..!! எ..என்னாச்சு..??”
– தொடரும்