கண்ணாமூச்சி ரே ரே – 9 Like

“எ..என்ன நடந்துச்சுன்னு எனக்கு கொஞ்சம் தெளிவா சொல்லேன்.. ப்ளீஸ்..!! வனக்கொடி என்ன பாத்தாங்க..??”

ஆதிரா அவ்வாறு கேட்கவும், பூவள்ளி நீளமாக ஒரு பெருமூச்சை சிந்தினாள்.. சில வினாடிகள் அமைதியாக இருந்தாள்.. பிறகு தொண்டையை ஒருமுறை செருமிக்கொண்டு மெல்ல பேச ஆரம்பித்தாள்..!! அவள் பேச பேச.. ஆதிரா முகத்தில் பலவித உணர்ச்சிகளுடன்.. அவற்றையெல்லாம் கவனமாக கேட்டுக் கொண்டாள்..!!

பூவள்ளி பேசி ஓய்ந்த பிறகும்.. அவள் சொல்ல நினைத்ததெல்லாம் சொல்லி முடித்த பிறகும்.. ஆதிராவின் மனம் அவள் சொன்ன விஷயங்களையே நெடுநேரம் அசை போட்டுக் கொண்டிருந்தது..!! நம்புவதற்கே கடினமான ஒரு சில விஷயங்கள்.. நானும் இதைத்தான் இத்தனை நாளாய் நம்பியிருந்தேனா என்று அவளுக்குள் ஒரு கேள்வி வேறு..!! எந்த ஒரு முடிவுக்கும் தெளிவாக அவளால் வர இயலவில்லை..!!

“வனக்கொடி சொன்னதை கேட்டுட்டு நாம சும்மா இருந்துட்டோமா.. தாமிராவை தேடி கண்டுபிடிக்க எதுவும் பண்ணலயா..??”

“என்ன பண்ணிருக்கனும்னு சொல்ற..??”

“போலீஸ்ல..??”

“எல்லாத்தையும் மறந்துட்டியா நீ..?? போலீஸ்லயும்தான் கம்ப்ளயின்ட் பண்ணினோம் ஆதிரா..!! அவங்களாலயும் எதும் செய்ய முடியல.. வனக்கொடியை துருவி துருவி கேள்வி கேட்டதோட சரி..!!”

அதற்கு மேலும் அம்மாவை துருவி துருவி கேட்க ஆதிராவுக்கு இஷ்டம் இல்லை.. அமைதியாக ‘ம்ம்’ கொட்டினாள்..!!

“ம்ம்..!!”

“ஏதோ நம்ம கெட்ட நேரம்.. தாமிராவை இழந்துட்டோம்.. அங்கயே இருந்து உன்னையும் இழந்துடுவோமோன்னு எங்களுக்கு பயம் வந்துடுச்சு.. அதான்டா எல்லாரும் சிபியோட கெளம்பி மைசூர் வந்துட்டோம்..!!”

“ம்ம்..!!”

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பிறகும்.. சில நாட்கள்.. ஆதிராவுக்கு புத்தி குழப்பமாகவும், மன அழுத்தமாகவுமே கழிந்தன..!! ஒருவருடமாக வாழ்ந்த வீட்டின் ஒவ்வொரு மூலையையும்.. புதிதாக பார்ப்பது போலவே மிரட்சியுடன் பார்த்தாள்..!! வீட்டில் அவளுடைய பொருட்களை வைத்திருந்த இடமெல்லாம் மறந்து போயிருந்தன.. விரலில் முளைத்திருந்த சிபி அளித்த மோதிரம் வித்தியாசமாக காட்சியளித்தது..!! பேஸ்ட், ப்ரஷ், சோப்பு, உள்ளாடைகள் முதற்கொண்டு.. எதை தேடிக் கண்டுபிடிப்பதானாலும் அம்மாவின் துணை தேவைப்பட்டது..!!

“மதியம் வந்துடுவேன்.. எதாவதுனா கால் பண்ணு..!!”

வேலை விஷயமாக வெளியில் கிளம்பியிருந்த சிபி.. ஆதிராவின் கையில் ஒரு செல்ஃபோனை திணிக்க.. அவள் அந்த செல்ஃபோனை இப்படியும் அப்படியுமாய் புரட்டி புரட்டி பார்த்தவாறே.. கணவனிடம் குழப்பமாக கேட்டாள்..!!

“யா..யாரோட ஃபோன் இது..??”

“உன்னோடதுதான்டா..!!”

“நா..நான்.. நான் நோக்கியால வச்சிருந்தேன்.. இது..??”

“ஓ.. அதுவும் மறந்து போச்சா..?? அந்த ஓல்ட் மாடல் நோக்கியாவை ஒரு வருஷம் முன்னாடியே நீ தொலைச்சுட்ட.. மைசூர் வந்ததுல இருந்து இந்த மொபைல்தான் யூஸ் பண்ணிட்டு இருக்குற..!! இது லேட்டஸ்ட் ஸ்மார்ட்ஃபோன்.. டச் ஸ்க்ரீன்..!!”

“ம்ம்..!! இதென்ன இவ்ளோ பெருசா இருக்கு.. இதை எப்படி அன்லாக் பண்றது..??”

பரிதாபமாக கேட்ட மனைவியை பார்க்க.. சிபிக்கு சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை..!! வெளியில் செல்ல தயாராக இருந்தவன்.. அப்படியே ஆதிராவின் அருகில் அமர்ந்து.. மேலும் ஐந்து நிமிடங்கள் செலவழித்து.. அந்த செல்ஃபோனை இயக்கும் முறை பற்றி அவளுக்கு விளக்கி முடித்தே கிளம்பினான்..!!
இந்த மாதிரியான மறதி குழப்பம் ஒருபுறம் இருக்க.. வேறு மாதிரியான மன அழுத்தம் இன்னொரு புறம்..!! அகழி பற்றியும் அவளுடைய தங்கை பற்றியுமான நினைவுகளே அந்த மாதிரியான அழுத்தத்துக்கு காரணம்..!! எவ்வளவு நேரந்தான் மாத்திரையின் வீரியத்தில் மயங்கி கிடப்பது..?? விழித்திருக்கையில் எல்லாம் பலவித சிந்தனைகளுடன்.. அவளுடைய மனம் ஒருவித அழுத்தத்திலேயே தத்தளித்தது..!!

மர்மமான முறையில் மனிதர்கள் காணாமல் போவது.. அகழிக்கும் புதிதல்ல.. ஆதிராவுக்கும் புதிதல்ல..!! நூறு வருடங்களாகவே அகழியில் இது மாதிரியான சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.. ஆதிராவும் அதுபற்றியெல்லாம் நிறையவே கேள்விப் பட்டிருக்கிறாள்..!! குழந்தைகள்.. இளம்பெண்கள்.. இல்லத்தரசிகள்.. சில முதியவர்கள் கூட.. திடீர் திடீரென காணாமல் போய்விடுவார்கள்..!! காணாமல் போன நபர்களில் இதுவரை ஒருவரைக் கூட காவல்துறையால் மீட்டுக் கொடுக்க இயலவில்லை..!!

குறிஞ்சிதான் இதற்கெல்லாம் காரணம் என்பது அகழி மக்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை..!! நூறு வருடங்களாக.. அடுத்தடுத்து வந்த சந்ததியினருக்கு.. குறிஞ்சியின் கதை ஒட்டுமொத்தமாக திரிக்கப்பட்டே உரைக்கப்பட்டிருந்தது..!! புவனகிரியும், அகழி மக்களும் குறிஞ்சிக்கு இழைத்த அநீதி சுத்தமாக மறைக்கப்பட்டிருந்தது..!! குறிஞ்சி என்பவள் ஒரு பில்லி சூனியக்காரி எனவும்.. அவளுடைய சித்து விளையாட்டுக்களால் ஊருக்கு பல இன்னல்கள் நேர்ந்தது எனவும்.. ஆத்திரமடைந்த ஊர்மக்கள் அவளை தீயிட்டு கொளுத்தினர் எனவும்.. அப்படியும் அடங்காமல் இன்னும் ஆவியாக அலைகிறாள் எனவும்தான்.. இப்போதிருக்கிற அகழி மக்கள் குறிஞ்சியின் கதையை அறிவர்..!!

“செவப்பு அங்கி போத்திருப்பா.. உச்சந்தலைல இருந்து உள்ளங்கால் வரை அங்கிதான்.. நடக்குறாளா மெதக்குறாளா கூட தெரியாது..!! இங்க நிக்கிற மாதிரி இருக்கும்.. கண்ணு மூடி கண்ணு தெறக்குறதுக்குள்ள அங்ங்ங்க நிப்பா..!!”

“காட்டுக்குள்ள உக்காந்து தனியா அழுதுகிட்டு இருந்தா.. கைல ஏதோ கொழந்தை கணக்கா இருந்துச்சு.. அதை கொஞ்சிக்கிட்டே அழுதுகிட்டு இருந்தா..!!”

“சிங்கமலை உச்சில நின்னவ.. சிரிச்சுக்கிட்டே தலைகுப்புற ஆத்துல குதிச்சுட்டாளப்பா..!! என் ரெண்டு கண்ணாலயும் பாத்தேனப்பா..!!”

“தாகமா இருக்கு தண்ணி குடு.. தாகமா இருக்கு தண்ணி குடுன்னு.. பின்னாடியே வந்தா..!! நான் கொடத்தை கீழ போட்டுட்டு திரும்பிகூட பாக்காம ஒரே ஓட்டமா ஓடியாந்துட்டேன்..!!”

இதுபோல.. குறிஞ்சியை கண்ணால் பார்த்த கதைகளும் ஊருக்குள் ஏராளம்.. ஆதிராவும் அந்தக்கதைகளில் பலவற்றை அறிவாள்..!!

– தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *