பயில்வான் ராவுத்தர் தாத்தாவும் ஊர் திண்ணையும் Like

ஊர் கூட்டத்தில் பெரும்பாலும் பெண்கள் மீது பிராது இருந்தால், அவளை முன்னால் நிறுத்த மாட்டார்கள். வீட்டு முகவரி, இன்னார மகள், மனைவி என்று பெயரைச்சொல்லித்தான் அவள் மீது உள்ள பிராதை விசாரிப்பார்கள். மேலும் இங்கே பிராது ராவுத்தர் தாத்தா மீது தான் என்பதால் அவர் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தார். ராவுத்தர் தாத்தா எதற்கும் கலங்காக பயில்வான் ஆயிற்றே. கம்பீரமாக சைக்கிளில் வந்து இறங்கினார். முதலில் கூட்டத்தாரிடம் இது நான் சுக்கு காபி கொடுக்கிற டைம். ஊர் மரியாதைக்கு உடனே வந்துட்டேன். முதல்ல ஒரு சுக்கு காப்பியை ஆர்டர் பண்ணுங்க என்றார் தாத்தா கேஷுவலாக.

ஊர் அதிர்ச்சியோடு ராவுத்தர் தாத்தாவை பார்த்தாலும் அவர் ரத்தினச் சுருக்கமாக விளக்கத்தை சொல்லி முடித்தார்.

இதோ பாருங்க நான் இந்த ஏரியாவுக்கு பிழைக்க வந்தவன் தான். அதுக்காக யாருக்கும் கட்டுபட்டவன் இல்லை. ஏதோ பல வருஷம் உங்க முன்னாடி வாழ்ந்த மரியாதைக்கு தான் வந்தேன். அல்லாவுக்கு மட்டும் தான் கட்டுப்படுவேன். நான் பண்ணது கூட அல்லாவின் ஆணை தான். அதுபடி தான் உங்களோட பலபேர் திண்ணையில படுத்திருக்கேன். அது கூட நீங்க கூப்பிட்டுத்தான் நானா யாரு வீட்டு திண்ணையிலும் படுத்தது கிடையாது.

இதே சாலம்மா என்கிட்டே தீர்வுக்கு வராம இந்த ஊர் கூட்டத்துல நான் அனாதையா சாவ விரும்பல. படுத்த படைக்கை ஆகிட்டா என்னை யாரு பார்த்துப்பானு வந்து நின்னிருந்தா என்ன தீர்ப்பு கொடுத்திருப்பீங்க. அதுக்கு பதில் சொல்லுங்க நான் விளக்கம் சொல்றேன் என்றார்.

ஊர் அமைதியாகிவிட்டாலும், இல்ல தாத்தா இது தப்பான உதாரணம் ஆகிடக்கூடாது என்று ஒருவர் பேச ஆரம்பித்த போது, எது தப்பு, எது சரினு யாரு முடிவு பண்றது. அப்படிப்பார்த்தா நான் திண்ணையில படுத்ததே தப்பு தான். படுக்க கூப்பிட்டதும் தப்பு தான் என்றார். ஆனால் அதற்கு ஊர் அமைதி ஆகிவிட, சரி எப்போ நானே பிரச்சனை ஆகிட்டேனோ இதுக்கு நானே முடிவு கட்டுறேன்.

சாலம்மா இனிமே தனி, நான் தனி கிடையாது. அவளை நான் கட்டிக்கிறேன். இது வரைக்கும் பொதுநலத்தோடு வாழந்துட்டேன். அது தப்புனு உணர்றேன். நானும் சாலம்மாவைப்போல அனாதை தான். எனக்கும் இப்போ எதிர்காலத்தை பத்தி பயம் வந்துடுச்சு. அதனால் நான் நாளைக்கு விடியறதுக்குள்ள சாலம்மாவோட இந்த ஊரை விட்டு போயிடுறேன். நல்லவங்க, பெரியவங்க இதுவரைக்கும் என் மேல் அன்பு ஆதரவு காட்டினதுக்கு நன்றி. சாலம்மாவோட வீட்டை கூட வித்து பள்ளிவாசலுக்கு நன்கொடையா கொடுத்திடுங்க.
இதை சாலம்மாவோட அனுமதி இல்லாமத்தான் சொல்றேன். அவளும் மறுக்கமாட்டாள். இனி காலம்பூரா அவளுக்கு நானும் எனக்கு அவளும் துணை. அல்லா எங்களை காப்பாத்துவான். உங்களையும் காப்பாத்தட்டும் என்று சொல்லி விட்டு சைக்கிளை எடுத்து கொண்டு சாலம்மா வீட்டுக்கு வந்து அவளை அழைத்து கொண்டு ஊரை விட்டு கிளம்பினார். அதுவரை ராவுத்தர் தாத்தாவாக பார்த்த மொத்த ஏரியாவும் மெளனமாக நின்றாலும் சிலர் கண்களில் கண்ணீர், சிலர் கைதட்டினார்கள். சிலர் ஊர் வரம்பை மீறி வாழ்க கோஷம் போட்டார்கள்.

ராவுத்தர் தாத்தாவோ ஒரு ஹீரோவைப்போல் தன் கம்பீரம் குறையாமல் ஊரை கடந்து போனார். தாத்தா ஊரை விட்டு கிளம்பி போன பிறகு அந்த ஏரியாவை களை இழந்தது. எதையோ இழந்ததைப்போல் தவித்தது. பலர் ஒருவருக்கு ஒருவர் சபித்து கொண்டார்கள். எல்லா பாவத்துக்கும் நீதி கிடைக்காது. நீதி தேவைப்படாத பாவங்கள் செய்தபோது ஏன் சில பாவத்துக்கு மட்டும் நீதி தேடி தங்களை நிந்தித்து கொள்கிறார்கள் என்கிற வாக்கியம் ராவுத்தர் தாத்தா போன பிறகு ஒவ்வொருவர் மனதிலும் வந்து போனது.

அதற்கு பிறகு ஏரியாவில் பல தீர்க்க முடியாத பிரச்சனைகள். சிலர் குழந்தை பேரின்றி வாழாவெட்டியாக ஊரில் வாழ்ந்து வருகிறார்கள். சிலர் பிரச்சனையை தீர்க்க ராவுத்தர் தாத்தாவை ஊர் ஊராக தேடி அலைகிறார்கள். ராவுத்தர் தாத்தா யார் கண்ணிலும் சிக்கவில்லை. சாலம்மாவுக்கே ஆயுசு கணக்கு சொன்ன ராவுத்தர் தாத்தாவுக்கா தன் எதிர்காலம் பற்றிய பயம் வருகிறது.

எங்கேயோ ஏதோ ஒரு ஊரில் பள்ளிவாசல் அருகில் தான் அவர்கள் தம்பதிகளாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள். ஆனால் சத்தியமாக இனி ராவுத்தர் தாத்தா யாருக்காகவும், எதற்காகவும் ஓத மாட்டார். இனி அவர் வாழப்போவது அவர் வாழ்க்கையை மட்டுமே சாலம்மாவோடு…

நன்றி..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *